×

ஒரே நாளில் 23 பேர் அவுட்! கேப் டவுனில் விக்கெட் மழை: தென் ஆப்ரிக்கா 55 & 62/3 இந்தியா 153

கேப் டவுன்: இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளிடையே கேப் டவுனில் நடக்கும் முதல் டெஸ்டின் முதல் நாளில் 23 விக்கெட் சரிந்தது. முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்கா 55 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இந்தியா 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்துள்ளது. நியூலேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க கேபட்ன் டீன் எல்கர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். சிராஜ் வேகத்தை சமாளிக்க முடியாமல் திணறிய தென் ஆப்ரிக்கா 23.2 ஓவரில் வெற்றும் 55 ரன் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்சை இழந்தது. கைல் வெர்ரைன் 15 ரன், டேவிட் பெடிங்காம் 12 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர்.

இந்திய பந்துவீச்சில் முகமது சிராஜ் 9 ஓவரில் 3 மெய்டன் உள்பட 15 ரன்னுக்கு 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். பும்ரா, முகேஷ் குமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 33 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து வலுவான முன்னிலை நோக்கி உறுதியான நடை போட்டது. எனினும், அடுத்த 11 பந்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் எஞ்சிய 6 விக்கெட்டையும் பறிகொடுத்து 34.5 ஓவரில் 153 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ரோகித் 39, கில் 36, கோஹ்லி 46 ரன் (59 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, கே.எல்.ராகுல் 33 பந்தில் ஒரு பவுண்டரி உள்பட 8 ரன் எடுத்தார். 6 பேட்ஸ்மேன்கள் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா, என்ஜிடி, பர்கர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 98 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா, முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்துள்ளது. எல்கர் 12, சோர்ஸி, ஸ்டப்ஸ் தலா 1 ரன்னில் வெளியேறினர். மார்க்ரம் 36, பெடிங்காம் 7 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 7 விக்கெட் இருக்க தென் ஆப்ரிக்கா இன்னும் 36 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 2வது நாள் சவாலை சந்திக்கிறது. முதல் நாளிலேயே 23 விக்கெட் சரிந்துள்ளதால் இந்த போட்டி இன்றுடன் முடிந்தாலும் ஆச்சரியம் இல்லை.

 

The post ஒரே நாளில் 23 பேர் அவுட்! கேப் டவுனில் விக்கெட் மழை: தென் ஆப்ரிக்கா 55 & 62/3 இந்தியா 153 appeared first on Dinakaran.

Tags : Cape Town ,South Africa ,India ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன்...